நயினை நாகபூசணி அம்மன் திருக்கோவிலின் அறங்காவல் சபைத் தலைவர் சிவத்திரு.கந்தசாமி பரமலிங்கம் அவர்களின் எண்பதாவது அகவைத்திருநாள் இன்று (20 அக்டோபர்). அவர் எல்லாம்வல்ல பரம்பொருளைக் கட்டியணைத்து நயினையம்பதியில் உறையும் அம்பாளின் அருளாசிகளைப் பெற்று நீடு வாழ்ந்து இன்னும் அளப்பரிய சிவப்பணியை செய்து வாழ்வாங்கு வாழ வாழ்த்திப் பணிகிறோம்.

வடக்கில் சைவம் , மற்றும் சைவத்தமிழ் பண்பாடுகளில் இன்றும் அழியாத மாண்புடைய ஊர்களில் யாழ்ப்பாண தீவகங்கள் முன்னிலை வகிக்கின்றன என்றால் மறுக்கமுடியாது. கோவில்கள் , விழாக்கள் , சடங்குகள் , மரபுகள் , உறவுமுறைகள் , இனசனத்தை முறைசொல்லி அழைக்கும் பண்பாடுகள் , உபசரிப்பு , சொந்தபந்தங்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

நயினாதீவில் கல்விகற்று அங்கிருந்து இலங்கை நிர்வாகத்துறை சேவை பரீட்சையில் சித்திபெற்று பல உயர் பதவிகளில் வகித்து பின்னர் இளைப்பாறி சொந்த ஊரிலே இறைபணிக்காக தன்னை அர்ப்பணித்து வரும் உயர்ந்த மனிதர்.

இவர் திரிகோணமலையில் வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணத்தில் ஆளுநரின் செயலராக , பின்னர் பொதுத்துறை நிர்வாகத்தில் செயலாளராக , கிராமிய அபிவிருத்தி செயலாளராக அத்துடன் இந்து அமைச்சின் ஆலோசகராக , இலங்கை ஜனாதிபதிக்கு ஆலோசகராக , வடக்கு மக்கள் சேவை ஆணைக்குழுவின் தலைவராக , மேலும் மேல் மாகாணசபை உறுப்பினராக தனது பரந்த விரிந்த பணிகளை ஆற்றி அந்த அனுபவத்தினை தனது ஊருக்கு பயன்படுத்த மீண்டும் நயினையில் வாழ்ந்து அவனருளால் அவன் தாள்களை வணங்கி வருகிறார்.

ஒருகாலத்தில் திரிகோணமலையில் நயினை மண்ணின் ஆளுமைகளாக பேசப்பட்டவர்கள் சிவத்திரு.பராமலிங்கம் மற்றும் சிவனடி சென்ற சிவத்திரு.விக்னேசுவரன். இவர்கள் கிழக்கு மாகாண வரலாற்றிலும் இடம்பிடித்துள்ளார்கள்.

கவாட் பல்கலைக்கழகத்திலும் கிடைக்காத ஆளுமைகளை ஈழத்து கோவில்கள் , கோவில் சார்ந்த செயற்பாடுகள் உருவாக்கின்றன என்பதற்கு இவரும் ஒரு உதாரணம். இவர் வையத்துள் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல ஆதிப்பரம்பொருளான சிவபெருமானையும் அவரின் பக்கமான பாகமான சக்தி வடிவான அம்பாளையும் வேண்டி பணிகிறோம்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலைக்
கண்ணில் நல்லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்

திருவம்பலம் தென்னவன்
தென்னாடு.