The temple of Chola-time Varivanesar is restored in the middle of Chavakacheri again to shower abundance of divine grace to the land.

சிவபூமியென்று புகழப்படும் இலங்கையில், இராவணன் காலத்தில் இருந்தே பல சிவன் கோவில்கள் இருந்துள்ளன. முன்னைய காலங்களில் அடியார்கள் தாமாகவே செந்தமிழில் ஆடல்வல்லானை வணங்கி அருளுடன் ஆற்றலும் ஆட்சியும் பெற்று வாழ்ந்தனர். அந்தவகையில் விருபாக்கன் என்பவரினால் வாரிவனத்தில் (சாவகச்சேரியில்) உருவாக்கப்பட்ட தான்தோன்றி இலிங்கக்கோயில், பின்னர் சோழர்களால் பெரிதாக்கப்பட்டு சிறப்பாக இருந்தது. பிற்பகுதியில் போத்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர்களால் கோயில் முற்றாக நாசமாக்கப்பட்டது. அதன்பின் சாவகச்சேரியில் மத்திய போக்குவரத்து நடுவத்திற்கு அண்மித்த இடத்தில் புதிய கோவிலமைத்து சோழர்கால வாரிவனலிங்கத்தினை வைத்து மக்கள் வழிபட்டு வந்தனர். மீண்டும் இறைவன் திருவருளால் வாரிவனத்தின் நடுவிலே நீதிமன்ற வளாகத்தின் முன் புதுப்பொலிவுடன் கருங்கல் கருவூலமாகவும் புதிய  இலிங்கமாக வாரியப்பர்  எழுந்தருளி செந்தமிழில் வழிபடப்படுகிறார்.

இந்தியாவில் நைமிசாரண்யா வனத்தில் கூடி இருந்த ரிசிகள், முனிவர்கள் சூதக முனிவரிடம் ‘மாபெரும் முனிவரே! சிவபெருமானைக் குறித்த பல புராணங்களை எங்களுக்கு அருளிச் செய்திருக்கிறீர்கள். கயிலை, காசி, காஞ்சி, சிதம்பரம், திருக்கழுக்குன்றம் போன்ற பல புராணங்களைக் குறித்து விளக்கமான கதைகளை எடுத்துக் கூறியது போல் சிறப்புடைய வேறொரு தலத்தின் பெருமையை இன்று எங்களுக்கு எடுத்துரைக்க வேண்டுகிறோம்’ என்று கேட்டார்கள்.

அதைக் கேட்ட சூதக முனிவர் அவர்களுக்கு வாரிவனப்பகுதியில் (சாவகச்சேரியில்) இருந்த வாரிவனேசர் சிவாலயத்தின் கதையைக் கூறத் தொடங்கினார். சூத முனிவர் கூறிய புராணமாகிய தக்ஷிண (தென்) கைலாச புராணத்தில் பதின்னான்காவது படலத்தில் குறிப்பிட்டுள்ள புராணத்தில் வாரிவனம் பற்றிய வரலாற்றினை கீழே பார்ப்போம்.

முற்காலத்தில் சோழவள நாட்டில் சிறப்பான இடமாகிய திருவாஞ்சியப் பகுதியில் சிவபத்தனாகிய வைசிய குலத்தினைச் சேர்ந்த (வணிக குலம்:குலவியல்புகள்-வாணிபம் செய்தல், பயிரிடுதல், வள்ளல் தன்மை, ஏமாற்றாமை, கிடைத்த பொருளைக் கொண்டு மன நிறைவு அடைதல்) விருபாக்கன் வாழ்ந்து வந்தான். அவன் தன்னை நாடிவரும் முனிவர்கள், சிவனடியார்கள், துறவிகள் மற்றும் அந்தணர்களுக்கு நெல், உணவு, பொன், பொருள், ஆடை போன்றவற்றை வாரி வழங்குவான். அடியார்தம் பெருமையை உலகிற்கு வெளிப்படுத்த விரும்பிய எங்கள் பெருமான், மறையவர் வேடம்தாங்கி விருபாக்கனிடம் வந்து தனக்கு வீடு வாசல் இல்லையென்றும் உண்ண உணவில்லையென்றும் கூறி இரந்து நிற்க, விருபாக்கன் தன் வீட்டையும் விளை நிலங்களையும் மறையவருக்கு எழுதிக்கொடுத்தார். பின்னர் இவற்றினை வாங்கிய மறையவர் மறைந்ததைக் கண்ட விருபாக்கன் இது ஆண்டவன் திருவிளையாடல்  என்று உணர்ந்து மனைவி விசாலாட்சியுடன் திருமறைக்காட்டிற்கு வந்து  மறைக்காட்டுநாதரை வணங்கிப் பின்னர் கப்பலேறி காங்கேசன்துறை வழியாக யாழ்ப்பாணம் வந்தார்.

சிவலிங்கம் தான்தோன்றியாக வாரிவனத்தில் வெளிப்படல்

கொடிக்கமத்தில் (கொடிகாமம்) வசித்து வந்த விருபாக்கன் வணிக வழி வந்தவன். பொருள் இல்லாவிட்டாலும் அருள்பெற்ற விருபாக்கன் கொடிகாமம் பகுதியில் பசுக்கள் நிறைந்து இருந்ததால் தனது வாழ்வாதாரத்திற்கு பசுக்களை வளர்த்து பால் வணிகம் செய்தான். பாலினை குடத்தில் நிரப்பி தலையில் கொண்டு பல இடங்களுக்குச் சென்று வணிகம் செய்வான். இப்படி இருக்கையில் ஒருநாள் குடத்துடன் செல்லும் பொழுது கால் தடக்கி விழுந்து குடம் உடைந்தது. இது தன் கவலையீனம் என்று நினைத்து வீடு மீண்டான். மறுநாளும் இப்படியே அதே இடத்தில் குடம் தவறிவிழ வியப்படைந்த விருபாக்கன் வந்தவழியைப் பார்க்க மாதொருபாகன் சிவலிங்க வடிவில் கொடிகளின் மத்தியில் காட்சி கொடுத்தார்.

விருபாக்கன் சிவலிங்க வடிவம் வெளிப்பட்ட காட்சியைக் கண்டதும் தன்னறிவு மயங்கிப் பின்னர் சிவபெருமானின் திருவருளுடன் நல்லறிவு விளங்கவும் எழுந்து நின்று கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருக, கழகமோடு அமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமிழைத் தந்த கண்ணுதற் பெருங்கடவுளை வணங்கிக் கீழ்க்கண்டவாறு  போற்றிப்பாடி வணக்கம் சொன்னான்.

ஐந்தெழுத்தாகினார்க்கு வணக்கம்
அம்பிகை பாகனார்க்கு வணக்கம்
அடியார்கள் நினைத்தவை அளிப்பவர்க்கு வணக்கம்
ஆதி நடு அந்தமில்லாதவர்க்கு வணக்கம்
அருஞ்சிவலிங்க வடிவாகினர்க்கு வணக்கம்
குணமாயினார்க்கு வணக்கம்
குணியாயினார்க்கு வணக்கம் (நற்குணமுடையவன்)
வான் வடிவர்க்கு வணக்கம்
அரவப் பூணுல் அணிந்தவர்க்கு வணக்கம்
கபாலம் தரித்தவர்க்கு வணக்கம்
கைவல்லியம் (முத்தி) தருவார்க்கு வணக்கம்
காக்கும் கையர்க்கு வணக்கம்
தேவலிங்க வடிவாயினார்க்கு வணக்கம் என்று இறைவனை வரவேற்று தரையில் வீழ்ந்து வணங்கினான்.

வாரிவனேசர் மழை வெள்ளத்தில் மறைதல்

நாள்தோறும் பால்கொண்டு நீராட்டி, போற்றி வணங்கி வந்தான் விருபாக்கன். மீண்டும் விருபாக்கன் பெருமையை உலகிற்கு வெளிப்படுத்த விரும்பிய வாரிவனேசர், இவ்வருட (2020 சிலை/மார்கழி) மாரியை விட அதிகமாக மழையினை வரவழைத்து ஊழிக்காலமென ஐயுறும்படியாக பெருவெள்ளத்தினை ஏற்படுத்தினார். இப்பெருவெள்ளத்தில்  சிவலிங்கமும் முற்றாக மூழ்கி விடவும், நாள்தோறும் நாதனை பால்கொண்டு வணங்கிய விருபாக்கன் கவலையடைந்தான். இருண்டெழுந்த வானம் மின்னி முழங்கி கடும்மழை மென்மேலும் பொழிந்தது.  பெருவெள்ளத்தால் சிவலிங்கம் மூழ்கி சிவபூசை தடைப்பட்டதைக் கண்டு மனமுடைந்த விருபாக்கன், இறைவனான  வாரியப்பரை கண்டு சிவபூசையினை செய்ய முடியாதவிடத்து தான் இறந்துவிடத் துணிந்தான்.

சிவனின் அருளால் வைரவ சூலம் வெள்ளத்தினை வற்றச்செய்தது

எல்லாம் வல்ல பரம்பொருளாகிய சிவபெருமான்,பத்தனின் மனமறிந்து அவனை ஆட்கொள்ள நினைந்து , வைரவப் பெருமானிடம் “சூலப் படையை அனுப்பி நீரினை வற்றும்படி செய்யுமாறும் இல்லையேல் தன் பத்தன் விருபாக்கன் உயிரை மாய்ப்பான்” என்று கூறவும் வைரவப் பெருமான் தீயின் வலிமை கொண்ட சூலப்படையை ஏவி வெள்ளத்தினை வற்றச்செய்தார். வெள்ளம் வற்றி மீண்டும் வெளிப்பட்டார் வாரிவனேசர். விருபாக்கன் உடனே பாற்குடங்களை கொண்டு வாரிவனேசரை நீராட்டி, அவரைப் புகழ்ந்து பாடி அருளைப் பெற்றான். பின்னர் தனக்கு துணை செய்த பளையில் எழுந்தருளியிருக்கும் வைரவப் பெருமானுக்கு வடை படைத்து வணங்கினான்.

பின்னர், “பூதங்களின் தலைவராகிய தேவனே வணக்கம்! சிவனின் மகனாரே வணக்கம்! கால அக்கினி உருத்திர வடிவாகிய தேவரே வணக்கம்!” என்று வணங்கி வைரவப் பெருமானிடம்  “தேவரீர்! வாரிவனேசர் திருக்கோவிலிலே வந்து எழுந்தருளி, அடியார்களுக்கு நினைத்ததை வரமாக கொடுத்து இங்கேயே வீற்றிருந்து அருளுக!”என, வேண்டுகிறார். அவரின் விண்ணப்பத்தினை ஏற்று வைரவப் பெருமான் நீவிர் விரும்பியவாறே ஆகட்டும் என்று எழுந்தருளுகிறார். அதன் நிமித்தம் வைரவப் பெருமானும் இக்கருங்கற்கோவிலில் நிலைப்படுத்தப்படுகிறார். விருபாக்கன் வேண்டியது போல் வாரியப்பரும், வைரவரும் ஒரே இடத்தில் எழுந்தருளுவது மிகவும் சிறப்பானதாகும். விருபாக்கன் பின்னர் சிறிது காலம் தவமிருந்து, இல்வாழ்க்கையை முடித்து சி சிவபுரம் சென்றார்.

வாரிவனேசரை வழிபடுவோர் பலன்கள்

எவரொருவர் மனம் பொறிவழிப் போகாது ஐம்பொறிகளையும் மற்றும் மனம், புத்தி, சித்தம், அகங்காரத்தினையும் அடக்கித் தூயராகி பதின்மும்மைப் பிறைநாள் கழுவாய் வழிபாட்டன்றும்  (பிரதோஷ), சிவனிரவு மற்றும் கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமைகள் தோறும் (சோமவாரம்) விரதமிருந்து வாரியப்பரை அர்ச்சித்து வழிபடுகிறாரோ அவரது பாவங்கள், இம்மையிலும் மறுமையிலும் அழிந்து, இன்பமாக வாழ்ந்து சிவப்பரம் பொருளை அடையலாம் என்று நைமிசாரண்யா முனிவர்களுக்கு சூத புராணிகர் திருவாய்மலர்ந்தருளினார்.

அருள்மிகு ஆதி வாரிவனேசர் திருக்கோவில் மற்றும் சைவப் பண்பாட்டு நடுவம் அமைப்பு

 

சைவ மாணவர் சபையின் பொருளாளர் சிவத்திரு.தி.கௌரீசன் அவர்கள் பாதையால் செல்லும் பொழுது இந்த இடத்தில் வைக்கப்பட்ட பெயர்ப்பலகையைப் பார்த்துவிட்டு அடியேனுக்கு 2020 ஆனி 6ம் நாள் மறைமதி தினத்தன்று தொலைபேசியில் அழைத்தார். பின்னர் இது குறித்து ஆராய்ந்து, ஆஸ்திரேலியா அறம் அறக்கட்டளை மற்றும் சைவ மாணவர் சபையின் ஊடாக இந்தக் கோவில் மற்றும் சைவப் பண்பாட்டு நடுவம் கட்டுவதற்கு திருவருள் கூடியது. இதற்கான முழுச் செலவையும் வழங்க சாவகச்சேரியைச் சேர்ந்த சிவத்திரு.சங்கரப்பிள்ளை மாணிக்கம் வேதலிங்கம், சிவத்திரு.பொன்னுசாமி யாதவன், சிவத்திரு.சுப்ரமணியம் உமாலோகேஸ் மற்றும் சிவத்திரு.வி.சி.கணபதிப்பிள்ளை குடும்பத்தினர் மகிழ்வுடன் முன்வந்தனர்.

சைவ மாணவர் சபையின்(சை.மா.ச)வேண்டுகோளுக்கு இணங்க புராதன வாரிவனேசுவரர் ஆலய மரபுரிமை நிலையத்தின் தலைவர் , செயலர் மற்றும் பொருளர் உட்பட நிர்வாகத்தினர் செந்தமிழ் ஆகம வழிபாட்டின் வழி ஏற்ற தாழ்வு முறைமையற்ற வழிபாட்டு முறையில் கோவில் இயங்கும் என்ற உறுதிப்படுத்தலின் அடிப்படியில் கோவில் கட்டும் பணி 2020 ஆனி 18ம் நாள் பதின்மும்மைப் பிறைநாள் கழுவாய் தினத்தன்று அடிக்கல் நாட்டுதலுடன் ஆரம்பமானது. பல வகையான ஆலோசனைகளை மற்றும் அனுமதி ஒழுங்குகளை பேராசிரியர். பரமு புஷ்பரட்ணம் அவர்கள் வழங்கியிருந்தார். அத்துடன் கட்டுமான மற்றும் கள உதவிகளை சிவத்திரு. சங்கரப்பிள்ளை மாணிக்கம் வேதலிங்கம் , சிவத்திரு.வ.சசிராஜ் மற்றும் சிவத்திரு.அ.லதாங்கன் (செயலர்கள் சை.மா.ச), சிவத்திரு ஜீவா.சஜீவன் (தலைவர் சை.மா.ச) , சிவத்திரு.தி.கௌரீசன் (பொருளாளர் சை.மா.ச) மற்றும் சிவத்திரு.சு.சதீஸ்வரன் , சிவத்திரு.ம.கஜன் அவர்கள் மிகவும் சிறப்பாக வழங்கியிருந்தனர்.

அத்துடன் கருங்கல் கோயில் கட்டுமான வேலைகளை கிளிநொச்சி சிவத்திரு.ஆனந்தன் வினோத் அவர்கள் திறம்படச் செய்திருந்தார். சைவ பண்பாட்டு நடுவம் கட்டுமான வேலைகளை சிவத்திரு.அகிலன் அவர்கள் திறம்படச் செய்து முடித்திருந்தார். அருள்மிகு ஆதி வாரிவனேசர் திருக்கோவில் மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டு செந்தமிழ் ஆகம முறைப்படி தமிழிலே கடவுள் மங்கல நன்னீராட்டு, அருட்சுனைஞர் உயிரொளி சிவம் பிரதாபனார் குழுத் தலைமையில் சிலை நல்லோரையில் மார்கழித் திங்கள் பதிற்றொருமைப் பிறைநாள் அன்று இறையருளால் இனிதே நிகழ்ந்தது. அவருடன் பாலகுமாரக்குருக்கள் விக்னராஜக்குருக்கள் அவர்களும் துணையிருந்தார்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

சிவத்திரு.திருவம்பலம் தென்னவன்
(குணரத்தினம் பார்த்தீபன்)
தென்னாடு செந்தமிழாகம சிவமடம்,
கொக்குவில் , யாழ்ப்பாணம்.