தென்புலத்தார் வழிபாடு

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே – திருமந்திரம்

மானிடப்பிறப்பின் சிறப்பு

உரைசேரு மெண்பத்து நான்குநூ றாயிரமாம் யோனிபேதம்
நிரைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிரா யங்கங்கே நின்றான்கோயில்
வரைசேரு முகின்முழவ மயில்கள்பல நடமாட வண்டுபாட
விரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள் கையேற்கு மிழலையாமே

நூல்களில் உரைக்கப் பெறும் எண்பத்துநான்கு லட்சம் பிறப்பு வேறுபாடுகளையும் முறையாகப் படைத்து, அவ்வவற்றின் உயிர்கட்கு உயிராய் அங்கங்கே விளங்கி நிற்போனாகிய சிவபிரான் உறையும் கோயிலானது மலைகளில் தங்கியுள்ள மேகங்கள் எழுந்து வந்து முழவுபோல ஒலிக்க, ஆண்மயில்கள் பல நடனமாட, வண்டுகள்பாட, பரிசிலாகக் கொன்றை மரங்கள் மணம் பொருந்திய மலர் இதழ்களாகிய பொன்னைத் தர மெல்லிய காந்தள் மலர்கள் கை போல விரிந்து அதனை ஏற்கும் திருவீழிமிழலையாகும் என்பது பொருள்.

என்ற திருஞானசம்பந்தர் சுவாமி அவர்களின் பாடலின் படி ,  1.19×10-5  நிகழ்தகவில் தான் மனிதராக பிறக்கிறோம். இந்த மனிதப்பிறப்பென்பது ஆறாவது அறிவாகிய பகுத்தறிவுடன் கூடிய அருமையான இறைவனின் படைப்பாகும். இந்த ஆறாம் அறிவினை பயன்படுத்தி நிலையான இன்பம் (பேரின்பம்) , நிலையில்லாத இன்பம் (சிற்றின்பம்) போன்றவற்றினை பிரித்தறிந்து பேரின்பப்பெருவாழ்வினை அடையும் வழியினை கடைபிடித்து இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து மீண்டும் பிறப்பில்லா பெருவாழ்வினை அடைவதே பிறவிப்பயனாகும்.

இதனையே வள்ளுவரும்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்

ஒருவர் இல்லறத்தில் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் பொழுது அவரால் தெய்வீக நிலையை அடைய முடியுமா என்ற கேள்விக்கு வள்ளுவர் அழகாகப் பதிலளித்துள்ளார் இந்தக்குறளில்.ஒருவர் இல்லற வாழ்க்கையில் வாழ்வதற்கான அடிப்படை நெறிகளை கடைப்பற்றி நெறி தவறாது வாழ்ந்தால் , அதாவது தமிழ் வேதங்களாகிய அறம் , பொருள் , இன்பம் , வீடு என்ற அடிப்படையில் அறவழி நின்று பொருளீட்டி இன்பமாக வாழ்ந்து வீடுபெறுதல் என்ற வழக்கை முறையினை கடைப்பிடித்து வாழ்ந்தால் அவர் வானுறையும் தெய்வத்துக்கு நிகராக வைக்கப்படுவர் என்பது பொருள்.

அப்படி உயிர் இறைவனாகும் தன்மையை கொண்ட அற்புதப்  பிறப்பே மனிதப்பிறப்பு. இந்தப்  பிறப்பினை அதற்காக பயன்படுத்தாமல் ஐம்பொறிகளின் வழிநின்று , உலகியலில் தொலைந்து , சாதாரண முலையூட்டியாக வாழ்ந்து மடியப்போகிறோம் என்ற எண்ணம் எப்போது வருகிறதோ , அப்போதுதான் நீங்கள் மனிதப்பிறவியை உணருகிறீர்கள் எனலாம்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

என்ற சிவபுராணத்தில் மணிவாசகப் பெருமானின் வரிகளையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மனிதரை வழிபடும் வகைகள் மற்றும் சிறப்புகள்

தமிழர் மரபில் மூத்தோர் வழிபாடு , குரு வழிபாடு மற்றும் நீத்தார் வழிபாடு என்று மூன்றுவகையாக மனித வழிபாட்டுமுறையைப் பார்க்கலாம்.

மூத்தோர் என்பவர் , எங்களுக்கு முன்தோன்றி இப்பூவுலகில் வாழ்ந்து வாழ்வியல் அனுபவங்களை பெற்று , அவற்றினைப் பிரித்தறிந்து , அவற்றினை உணர்ந்தவர்களாக வாழ்கின்றனர். இப்படியான மூத்தோரை வழிபடுதல் தமிழர் மரபாக இருந்து வருகிறது. மூத்தோரிலே முதன்மை பெறுவர்கள் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள். வாழும் தெய்வங்களான இவர்களை நாங்கள் வணங்கி , அவர்களின் ஆசிகளை பெற்று எமது வாழ்க்கையினை கொண்டுசெல்வதே சிறப்பான எளிய வாழ்வியல் தந்திரமாகும்.

குரு வழிபாடு

தெளிவினை , ஞானத்தினை , அறிவினை , ஆற்றலினை அடைவதற்கு ஞானகுரு நிச்சயம் தேவை. சாதாரண மனிதராக பிறந்தவர்கள் இந்தவழியில் சென்று ஞானத்தினை பெறுவது இலகுவானது. அத்துடன் நமக்கு கல்வியினை தரும் , கலைகளை ஊடுகடத்தும் , அறிவுரைகளை வழங்கும் பெரியோர்களும் குரு எனுமிடத்தில் வருவார்கள். எமக்கு வழிகாட்டுபவர்களை வழிபடுவதும் தமிழர் பண்பாடாக இருந்து வருகிறது.

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே – திருமந்திரம்

திருவருளால் திருவடித் தெளிவினை அருளும் சிவமாகிய குருவினை காணுதல் , அதாவது அவரைப் பார்த்தல் மற்றும் அவரின் பெயரை தினமும் சொல்லுதல் அல்லது உச்சரித்தல் ஆகிய புறச் செயற்பாடுகளாலும் அவரிடமிருந்து செவியறிவுறுத் தருளிய திருவைந்தெழுத்தைச் சிறப்புற உளங்கொளக் கேட்டல் மற்றும் அவரது திருவுருவை உள்ளத்துள் உள்வாங்கல் என்னும் அக  செயற்பாடுகளாலும் உண்மையான ஞானத்தை உணரமுடியும்.

வாதவூராருக்கு சிவபெருமான் குருவாக வந்து குருந்த மரநிழலில் இருந்து திருவடிதீட்சை கொடுத்து முதலமைச்சராக இருந்த தென்னவன் பிரம்மராயனை மாணிக்கவாசகராக மாற்றி , ஞானத்தினை கொடுத்து இவ்வுலகிற்கு திருவாசகத்தினை தந்ததுடன் வாதவூரரையும் வீடுபெறச் செய்தார்.

இங்கேயும் புறமாக திருவடி தீட்சை கொடுத்து , அகமாக சூக்கும ஐந்தெழுத்தாகிய சிவாயநம என்ற மந்திரத்தினை கொடுத்து ஞானத்தினை கொடுக்கிறார். இதனையே மணிவாசகர்

நானேயோ தவம்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்இன் அமுதமாய்த் தித்திக்கும் சிவபெருமான்
தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே      எனப் பாடியுள்ளார்.

நீத்தார் வழிபாடு வழமை முறைகள்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மடிந்தவர்களை வழிபடும் மரபு பண்டைய காலத்தில் இருந்தே இருந்துவருகிறது. சங்ககால முறைமைக்கு வருவதற்கு முன்னர் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகின்ற ஆதித்தமிழர்கள் குமரிக்கண்டத்தில் / தென்னாட்டில் உயிர் நீத்தவர்களை வழிபடுகின்ற வழமைகளில் இருந்தது என்பதற்கு இலக்கியச்சான்றுகள் உள்ளன.

ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின் என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் பறுளி மணலினும் பலவே!

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போருக்குப் போகுமுன் பசு, பார்ப்பனர் (குறி பார்ப்பார், கணி(சோதிடம்) பார்ப்பார் என்போர்), பெண்டிர், பிணியுடையோர், ஆண் பிள்ளை இல்லாதோர் ஆகியோரைப் பாதுகாவலான இடத்திற்குச் செல்லுமாறு அறை கூவிப் பின்னர்ப் போர் செய்தான் என்று நெட்டிமையார் கூறுகிறார்.

இங்கே இந்த வரிகளை கவனித்தால்

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்

இறந்த முன்னோருக்குக் கடன் செலுத்தும் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் என குறிப்பிடப்படுகிறது. அத்துடன் இப்பாடலில் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை, பஃறுளி ஆற்று மணலினும் பலநாள் வாழ்க என்று நெட்டிமையார் வாழ்த்துவதிலிருந்து இவர் பஃறுளி ஆறு கடலால் கொள்ளப்படுவதற்கு முந்திய காலத்தவர் என்பது தெரிய வருகிறது. முன்னோர் வழிபாடானது தொன்று தொட்டு தமிழர் வாழ்வியலில் பின்னிப்பிணைந்திருக்கிறது.

நடுகல் வழிபாடே பின்னர் கோவில் வழிபாடாக மற்றும் தமிழாகம முறையாக மாறியது

மறைந்தவர்களுக்கு குறிப்பாக மறைந்த போர்வீரர்களுக்கு நடுகல் மற்றும் பதுக்கைகள் அமைக்கும் பழக்கம் ஆதித்தமிழர் பண்பாடுகளில் ஆழக்கலந்து இருந்தது என்பதற்கு பல இலக்கிய ஆதாரங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே நடுகல் அமைக்கும் வழக்கம் ஆதித்தமிழரிடம் இருந்ததென்பதும் அது சடங்கு முறையாகப் கொண்டாடப்பட்டது என்றும் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. இது பின்னர் ஆகம முறையாக மாறியது என்று கூறுவதில் மறுப்பதற்கு இடமில்லை.

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்தகு சிறப்பில் பெரும்படை வாழ்த்தலென்று
இருமூன்று மறபிற் கல்லொடு புணர – தொல். புறத்திணை இயல்  5

காட்சி – கல்காண்டல்

ஆனா வென்றி அமரில்வீழ்ந் தோற்குக்
கான நீளிடைக் கல்கண் டன்று

பெரிய வெற்றியைப் பெற்ற போரில் இறந்துவிட்ட வீரனுக்கு நடுகல் செய்யக் காட்டில் கல்லைத் தேர்ந்தெடுத்தல் என்பது மேலுள்ள செய்யுளின் பொருள்

கால்கோள் என்பது அக்கல்லினை நடுவதற்கு நல்ல நேரம் குறித்தல் / நாள்ப் பார்த்தல்

கால்கோள் என்பது கல்லைக் கொள்ளுதல் என்பதை குறிக்கிறது. தேர்ந் தெடுத்த நடுகல்லை எடுத்துக் கொணர்தல் என்பது பொருள்.

மண்மருளத் துடிகறங்க
விண்மேயாற்குக் கல்கொண்டன்று

நீரையும் மலரையும் சிதறி நறும்புகை காட்டி மணிகளை ஒலிக்கச் செய்து, பகைவரது சினத்தைக் கிளறிப் போரில் மாண்டவனுக்கு நடுகல் கல்லை எடுத்து கொணர்தல்.

நீர்ப்படை – கல் நீர்ப்படுத்தல்

வண்டுசூழ் தாமம் புடையே அலம்வரக்
கண்டு கொண்ட கல்நீர்ப் படுத்தன்று

காடே எரியும் வண்ணம் கதிரவன் வெப்பத்தைப் பொழிதலால், அந்த வெப்பம் தணிய நறுமணப் பொருள்களால் நீராட்டி வாவியில் கல்லை இட்டனர். பின்னர் அதனை சுத்தப்படுத்தி எழுந்தருள செய்வதற்கான ஆயத்தமாக இந்த படியை செய்தனர்.

நடுதல் – எழுந்தருளச் செய்தல்

வீரனுடைய பெயரைக் கல்லில் செதுக்கி அதாவது கல்லினை அடையாளப்படுத்தி அக்கல்லை நடுதல். முழுமையாக சிலைசெய்யமுடியாத காலத்தில் பெயரினை மட்டும் எழுத்து வடிவமாக எழுதி கல்லினை நட்டனர்.

மாலை துயல மணியெறிந்து மட்டுகுத்துப்
பீலி அணிந்து பெயர்பொறித்து – வேல்அமருள்
ஆண்தக நின்ற அமர்வெய்யோற்(கு) ஆகுஎன்று
காண்தக நாட்டினார் கல்

மாலைசூட்டி, மணி ஒலித்து, மயிற்பீலியைச் சூட்டி, அவன் பெயரை எழுதி வேற்போரில் ஆண்மைத்தன்மை வெளிப்படப் போரிட்ட வீரனுக்கு இது உருவமாகட்டும் என்று காணுமாறு கல்லை நட்டார்கள்’ . இதனையே தற்போதைய ஆகமங்களில் எழுந்தருள செய்தல் என்று கொள்ளலாம்.

பெரும்படை – கல் முறைப் பழிச்சல்

நிழலவிர் எழில்மணிப்பூண்
கழல்வெய்யோன் கல்வாழ்த்தின்று

ஒளி வீசும் அழகிய மணிஅணியையும் வீரக்கழலையும் உடைய வீரனுக்கு எடுக்கப்பட கல்லைப் புகழ்தல் என்பது பொருள்.இறந்த வீரனின் சிறப்புக்களை மற்றும் அவனின் வீரச்செயல்களைக் குறித்து போற்றி விழா எடுத்தலும் வாழ்த்துதலும் என்று பொருள் கொள்ளலாம்.

வாழ்த்துதல் – இற்கொண்டு புகுதல்

வேத்த மருள் விளிந்தோன் கல்லென
ஏத்தினர் துவன்றி இற்கொண்டு புக்கன்று

வேந்தர்களுக்கிடையிலான போரில் இறந்தவனுக்கு எடுக்கப்பட்ட கல் என்று சொல்லி வாழ்த்தி ஒன்றுகூடிக் கோயில் எடுத்தல்’ என்பது இதன் விளக்கம். இவ்வாறே தமிழர் வழிபாடுகள் ஆரம்பமாயின என்று இலக்கியப்பார்வையில் உறுதி படச்சொல்லமுடியும். இவைகளே பின்னர் கோவில்களாகவும் ஆகமங்களாகவும் மாறின என்றால் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

போரில் மரணமடைந்தவர்கள் தம் குடிகளைக் காக்க வந்தவர்களாகவும் அவர்கள் தம்மைக் காவல் செய்கிறார்கள் என்பதனையும் மக்கள் நம்பினர். பிற்காலத்தில் இவர்கள் குலதெய்வங்களாகவும் காவல் தெய்வங்களாகவும் மாறுகின்றனர்.ஆகவே நடுகல் வழிபாடே முன்னோரை தெய்வமாகப் போற்றி வழிபடும் மரபை முதன்முதலில் எடுத்துக்காட்டி நிற்கிறது.

களிறுபொரக் கலங்கு, கழன்முள் வேலி,
அரிதுஉண் கூவல், அங்குடிச் சீறூர்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும், ஒடியாது;
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்னையு
மோ………….வேந்தனொடு,
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே – அள்ளூர் நன் முல்லையார் பாடல் – புறநானூறு

யானைகள் மிதித்து இடையிடையே சிதைந்த முள்வேலியும், மக்கள் அரிதாகவே வந்து உண்ணும் நீர்நிலையும் உடைய சிறிய ஊரிலே வாழ்ந்தாள் ஒரு மறக்குல இளையவள் , விருந்தினர்கள் என் இல்லத்துக்கு வரவேண்டும் என்றும் என் கணவனுக்கும் வேந்தனுக்கும் நாடு விரிவாக்கும் பகைவனோடு போர் வரவேண்டும் என்றும் அதில் அவர்கள் வெல்லவேண்டும் என்றும் தன் குடி முன்னோரின் நடுகற்களை கைதொழுது பரவுகிறாள். இப்படித்தான் நீத்தார் வழிபாடு ஆரம்பமாகிறது. கல்லை கணவனாக்கி / வீரனாக்கி கடைசியில் காவல் தெய்வமாக்குகிறார்கள்.இதிலிருந்து தான் தமிழர் வழிபாட்டு முறைகள் ஆரம்பமாகின்றன.

தென்புலத்தார் வழிபாடு

குமரிக்கண்ட கடல்கோளின் பின்னர் , அங்கே அதாவது தெற்கே வாழ்ந்து கடல்கோளில் காவுகொள்ளப்பட்ட மக்களை நினைத்து முன்னெடுக்கப்பட்ட நீத்தார் வழிபாடுகளே தென்புலத்தார் வழிபாடு என்றாகியது.

பஃறுளி யாற்றுடன் பன் மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு,
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி – சிலப்பதிகாரம்

மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார் நாடு இடம்படப்
புலியொடு வில் நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன் – கலித்தொகை

தென்புலம் , தென்னாடு என்றழைக்கப்பட்ட குமரிக்கண்ட நிலத்தின் இலக்கிய குறிப்புகள் மேலே காட்டப்பட்டுள்ளன. இங்கு இருந்த பெருமளவான மக்கள் கடல்கோளினால் காவுகொள்ளப்பட்டனர் என்று நம்பப்படுகிறது. தெற்கினை யம திசை என்று மக்களுக்கு பயமூட்டியதற்கு இந்த கடல்கோளும் காரணமாகவிருக்கலாம். அத்துடன் தெற்கே கால் நீட்டி துயில் கொள்ளக்கூடாது என்பதும் , எங்கள் முன்னோர்கள் வாழ்ந்து மடிந்த மண்ணிற்கு காலை நீட்டாமல் அவர்களுக்கு மரியாதையை செய்வதாகவும் இருக்கலாம்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை – திருக்குறள்

தென்திசையில் உள்ள இறந்த மூதாதையர்கள்,தெய்வங்கள்,விருந்தினர்கள்,உற்ற குடும்பத்தார்கள் உறவினர்கள் சுற்றத்தார்கள், தான் என்னும் தன்னை ஆக்கிய ஐந்து வகையாரையும் பேணி வளர்த்து உபசரித்து சீர்தூக்கிப் போற்றி வாழ்வதே சிறப்பாகும். அதுவே இல்வாழ்க்கையின் அறமாகும். திருக்குறளை தமிழ்வேதம் என்று பாராட்டுபவர்கள் குமரிக்கண்டம் , தென்புலம் , தென்புலத்தார் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பதற்கு இந்தக்குறள் ஒரு சான்றாக அமைகிறது.

இந்தியாவில் கன்னியாகுமரி , ராமேசுவரம் கடல்பகுதியில் தெற்கு நோக்கி மக்கள் மறைந்த மக்களை வழிபாடு செய்யும் வழமை இன்றும் இருந்து வருகிறது. யா – என்றால் தெற்கு , தரை என்பது இடம் / நிலம் , யாத்தரை என்பது யாத்திரை ஆகி , தற்போது யாத்ரா ஆகிவிட்டது. இது எல்லாமே பண்டைத்தமிழர் வாழ்வியலும் பண்பாடும் சார்ந்தவையே.

டெம்பிள் (Temple) என்ற ஆங்கில வார்த்தையின் கருத்து தென்புலம் என்னும் தென்னாடு என எடுக்கலாம்

தென்புலம் என்ற சொல் இலத்தீனில் Templum என்றழைக்கப்பட்டிருக்கலாம். அது பின்னர் ஆங்கிலத்தில் Templum இலிருந்து Temple ஆகியிருக்கலாம். அதாவது மூத்தோர் மற்றும் தென்புலத்தார் வழிபாடே மனித நாகரிகத்தில் வழிபாட்டு முறைமைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது என்று பெருமைப்படுவதில் தமிழர்களாகிய நாம் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். அத்துடன் இதனை உலகத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்.

தென்புலத்தார் வழிபாடுகளும் வழிபாட்டுக் காலங்களும்

நீத்தார் வழிபாட்டிற்கு தென்புலத்தார் வழிபாடு என்ற பெயர்வரக் காரணத்தை முன்னர் விளகியிருந்தேன்.

பிறப்பினை நாள்மீன் (நட்சத்திரத்தினை வைத்தும்) இறப்பினை நிலவுடன் தொடர்பாக பிறைநாளினை (திதியை) வைத்தும் குறிப்பிட்டனர் பண்டைத்தமிழர். இது பொதுவாக பகல் / இரவு , எழுச்சி / வீழ்ச்சி என்ற தத்துவத்தில் வந்திருக்கலாம். ஆனால் நிச்சயமா விஞ்ஞான விளக்கம் இருக்கும் அதுபற்றிய முழுமையான அறிவு எனக்கு இல்லை.சூரியன் முதலான கிரகங்களை கோள்மீன் என்றும், நட்சத்திரங்களை நாள்மீன் என்றும் சொல்வது பண்டைத் தமிழ் மரபு. சூரியன் செல்லும் வீதியில் 12 வீடுகள் உள்ளன என்றும், அவற்றுள் மேடராசியே முதலில் உள்ளது என்றும் “நெடுநல்வாடை’ கூறுகிறது. (இது சங்கத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்)

மெழுகு செய் படமிசைத்
திண் நிலை மருப்பின் ஆடு தலையாக
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து – நெடுநல்வாடை 161

மெழுகு தேய்த்த மேல் பகுதியில் வலிமையான கொம்புடன் ஆடு (மேடராசி) முதலாக விண்ணில் ஊர்ந்து திரியும் ஓவியம் இருந்தது. இதிலிருந்து மேடராசி தான் முதலாவது வீடாக / ராசியாக குறிக்கப்படுகிறது.சூரியனின் பயணத்தினை இரண்டாகப் பிரிக்கலாம். இதில் சூரியன் மகரராசியில் இருந்து மிதுனராசி வரைக்கும் திங்களில் (மாதத்தில்) சுறவம் (தை) முதல் ஆடவை (ஆனி) வரை இருக்கும் காலம் ஆண்டுப்பகல் படைப்புருவாக்க காலமெனவும் அதாவது சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் காலம் (வடபுலப்பயணம் – உத்தராயணம்) எனவும் பின்னர் சூரியன் கடகத்தில் இருந்து தனுசு ராசி வரைக்கும் திங்களில் (மாதத்தில்) கடகத்தில் (ஆடியில்) இருந்து சிலை (மார்கழி) வரை ஆண்டிரவு ஒடுக்க காலம் அதாவது வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் காலம் (தென்புலப்பயணம் – தக்ஷிணாயணம்) எனவும் பிரிக்கலாம்.

தென்புலப்பயணம் தூய்மைப்படுத்துவதற்கானது , வடபுலப்பயணம் ஞானமடைதலுக்கானது என்று மரபுவழி பின்பற்றப்படுகிறது. பீசுமர் அம்புப்படுகையில் சிலைத்திங்களில் (மார்கழியில்) இருந்து சுறவத்திங்கள் (தை) வரை உயிரை விடாமல் வடபுலப்பயணம் ஞானமடைதலுக்கானது என்று காத்திருந்து உயிரை விட்டார். ஏனெனில், இயற்கையின் இந்த மாற்றத்தை உபயோகித்து அவர் தன்னிலை மாற்றத்தை சாத்தியமாக்க விரும்பினார்.அதுபோல சித்தாத்தர் (புத்தபெருமான்) அவர்களும் வடபுலப்பயணத்தின் மூன்றாவது நிறைமதி நாளில் ஞானம் அடைந்தார்.

அத்துடன் இந்த காலப்பகுதியில் வளர்ச்சி , செழிப்பு அறுவடைக்கு உகந்த காலமாகும். தமிழர் திருநாளாகிய தைப்பொங்கலும் வடபயண முதல்நாளிலே கொண்டாடப்படுகிறது.

வடபுலப்பயணத்தில் வரும் மறைமதியானது சுறவமறைமதி (தை அமாவாசை) எனவும் தென்புலப்பயணத்தில் வரும் மறைமதியானது கடகமறைமதி (ஆடி அமாவாசை) எனவும் கொண்டாடப்படுகிறது.

நீத்தார் நாள் (இறந்ததினம்) மற்றும் நீத்தல் பிறைநாள் (திதி) வழிபாடுகள்

உங்கள் அப்பாவோ , அம்மாவோ , உடன்பிறந்தோரோ அல்லது உறவினரோ சிவபுரம் அடைந்தால் (மறைந்தால்) , அது நிச்சயமா வீடு பெறுதலே. அவர்களின் ஆன்மாவைப் பொறுத்தவரை உடம்பெனும் சிறையில் இருந்து விடுதலை பெற்று எல்லாம் வல்ல பரம்பொருளின் பாதாரவிந்தங்களில் சென்றடைகிறார்கள். அவர்கள் நாள் , இறந்தநேரம் என்ன பிறைநாள் (திதி) இருக்கிறதோ அதுதான் அவர்களின் இறந்தகாலத்தினைக் குறிக்கும் பிறைநாள் கணக்கு (திதி).
பிறைநாள் (திதி) என்பது நிலவின் அசைவில் வைத்து கணிக்கப்படுகிறது. பதினாறு பிறைநாட்கள் இருக்கின்றன. இவற்றினை தமிழில் அதாவது உருவாக்கப்பட்ட மொழியில் பார்த்தால் காரணத்துடன் விளக்கமும் கிடைக்கும்.

மறைமதி (அமாவாசை) அடுத்து ஒருமை ( பிரதமை) , பின்னர் இருமை (துவிதியை) , மும்மை (திருதியை) , நான்மை (சதுர்த்தி) , ஐம்மை (பஞ்சமி) , அறுமை (சஷ்டி) , எழுமை (சப்தமி) , எண்மை (அஷ்டமி) , தொண்மை(நவமி) , பதின்மை (தசமி) , பதிற்றொருமை (ஏகாதசி) , பதிற்றிருமை (துவாதசி) , பதின்மும்மை (திரயோதசி) , பதினான்மை (சதுர்த்தசி) , நிறைமதி (பௌர்ணமி) என்று வளர்கிறது தேய்கிறது.

உதாரணமாக அம்மா அல்லது அப்பா பதிற்றிருமை (துவாதசி) பிறைநாளில் இறந்தால் , மாதந்தோறும் அடுத்த பன்னிரெண்டு மாதங்களுக்கு பதிற்றிருமைப் பிறைநாளில் அவருக்கு உரிய பூசை வழிபாடுகளை செய்து உணவு படைத்து , மற்றவர்களுக்கும் பகிர்ந்து , காகம் , பசு போன்ற உயிரினங்களுக்கும் , சிவனடியார்களுக்கும் உணவளித்து அவர்களின் சிவபுரப்பயணத்திற்கு வலுவூட்டுவதே அவர்களின் அவ்வுலக வாழ்விற்கும் எங்களின் இவ்வுலக வாழ்விற்கும் அருள் சேர்க்கும்.இப்படி மாதம் தோறும் செய்யமுடியாததால் பன்னிரெண்டு மாதங்களுக்கும் சேர்த்து முதல் மாத பிறைநாளாகிய (திதியாகிய) தினத்தில் அல்லது அந்தியெட்டி நாளில் ஒன்றாக சேர்த்துக் கொடுப்பது தற்கால வழமையாக மாறிவிட்டது.அதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அதே திங்கள் (மாத) அதே பிறைநாளில் (திதியில்) ஆண்டுபிறைநாளாக (ஆண்டுத்திதியாக) தமிழர் மரபில் கடைபிடிக்கப்படுகிறது.

இப்படியான காலங்களில் அம்மாவை அல்லது அப்பாவை நினைத்து சிவனடியார்களுக்கு உணவளித்தல் பெரும்புண்ணியம்.

யாவர்க்குமாம் உண்ணும்போது ஒருகைப்பிடி – திருமூலர்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே – மணிமேகலை
பசித்தோர் முகம் பார் – பட்டினத்தடிகள்
ஐயமிட்டுண் – ஒளவையார்
ஒருபிடி சோறுகொண்டு இட்டு உண்டு இரு – அலங்காரம்
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் – திருவருட்பிரகாச வள்ளலார்

பசித்தவனுக்கு அன்னந்தந்தால், உண்டவனுக்கு ஊன் குளிரும் , உள்ளம் குளிரும் , உணர்வு குளிரும் அத்துடன் உயிரும் குளிரும். உயிர் குளிர்ந்தால் உயிருக்குயிரான சிவம் குளிரும்.

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே – திருமந்திரம்

அத்துடன் சிவனடியாருக்கு அமுது கொடுத்தலை திருஞானசம்பந்தர் சுவாமிகள் பின்வருமாறு விபரிக்கின்றார்.

இரண்டாம் திருமுறையில் திருஞானசம்பந்த சுவாமிகள் மயிலாப்பூரில் இறந்த பெண்ணின் சாம்பலில் இருந்து அந்தப்பெண்ணை உயிர் பெறச்செய்தார். அதற்காக தமிழில் பாடிய திருப்பதிகம் பூம்பாவைத் திருப்பதிகம் ஆகும். இப்படி பல அற்புதங்களை செய்யப் பாடப்பட்ட பதிகங்கள் தமிழிலே தான் பாடப்பட்டது என்பதை கவனத்தில் கொள்க.

அதிலே அடியாருக்கு அமுது செய்வதன் மகத்துவத்தினையே முதலாவது பாடலாக பாடியுள்ளார்.

மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்

இதனை பெரியபுராணத்தில் திருஞானசம்பந்த நாயனார் வரலாற்றில் தெய்வசேக்கிழார் ,

மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதி சூடும்
அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல்
கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல்
உண்மையாம் எனில் உலகர் முன் வருக என்று உரைப்பார்

சிவபெருமானின் அடியார்களுக்கு அமுது செய்வித்தலும், சிவபிரானின் திருவிழாக்களைக் கண்டு களித்தலும் மனிதப்பிறவியில் கிடைத்தற்கரிய பேறு என்று கூறுகிறார்.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு – திருக்குறள்

என்பதற்கு அறவழியில் பொருளைத்தேடும் இவ்வுலகில் நாங்கள் அருளையும் தேடவேண்டும். அதேவேளை இறந்த எங்கள் முன்னோருக்கு , அப்பா அம்மா போன்றோருக்கு அவ்வுலகில் அருள் கிடைக்க இவுலகில் இருந்து ஆற்றும் கடனே பிறைநாள் (திதி , பிதிர் வழிபாடுகள்) வழிபாடுகள். இப்படியான வழிபாட்டினை நிச்சயமாக பிள்ளைகளாகிய , சகோதரர்களாகிய நாங்கள் செய்யவேண்டும். இது அவர்களுக்கு அவர்கள் சென்றபின் செய்யும் பணிவிடையாகும். அத்துடன் இதன்வழி எங்களுக்கும் அருளும் , பொருளும் , ஆற்றலும் வந்து கிடைக்கின்றன.

மறைமதி (அமாவாசை) தினத்தில் தென்புலத்தார் வழிபாடு மற்றும் பேரொடுக்கம் (மகாலய அமாவாசை)

வருடத்தில் சுறவத்திங்கள் மறைமதிப் பிறைநாள் (தை அமாவாசை) மற்றும் கடகத்திங்கள் மறைமதிப் பிறைநாள் ( ஆடி அமாவாசை) முக்கியமான நாட்களாகும். இத்தினத்தில் விரதமிருந்து , நீர் நிலைகளில் அல்லது கிணற்றில் நீராடி இறந்தவர்களுக்கு வழிபாடு செய்வது சிறப்பானதாகும். அத்துடன் எள்ளுடன் தர்ப்பை புல் சேர்த்து , நீர் இறைத்து , பிண்டம் வைக்கக்கூடியவர்கள் பிண்டம் வைத்து வழிபாடு செய்யலாம். ( அண்டத்தில் இருப்பது பிண்டத்தில் இருக்கும் என்பார்கள்).

அத்துடன் ஆண்டுபிறைநாளாக (ஆண்டுத்திதியாக) மற்றும் திங்கள் (மாத) பிறைநாளில் (திதியில்) தென்புலத்தார் வழிபாடு செய்ய முடியாதவர்கள் , பலவருடங்களாக செய்யாமல் விட்டவர்களுக்கு ஒரு சிறப்பான செய்தி. கவலையைவிட்டு கன்னித்திங்கள் (புரட்டாசி மாதம்) வருகின்ற மறைமதிப் பிறைநாள் (புரட்டாசி அமாவாசை) தினத்தன்று இந்த வழிபாட்டினை செய்யலாம். முன்னர் குறிப்பிட்டது போல கதிரவனின் தென்புலப்பயணம் தூய்மைப்படுத்துவதற்கானது (ஒடுக்க காலம்), ஆகவே இந்த மறைமதிப் பிறைநாள் மேலும் சிறப்பு பெறுகிறது. அத்துடன் இந்தக் காலப்பகுதியில் எம்முன்னோர்கள் பூமிக்கு வந்து எமது வழிபாட்டினை மற்றும் படையலை ஏற்கின்றனர் என்றும் கருதப்படுகிறது. அதற்கும் மேலாக அவர்களுக்கு அருளூட்டும் வகையில் நாங்கள் வழிபாடுகள் , சிவபூசை , சிவமங்கல நீராட்டு , சிவப்பெருவேள்வி , அடியாருக்கு அமுது , மற்றைய உயிரினங்களுக்கு உணவு , பசுவுக்கு உணவு , காக்கைக்கு உணவு படைத்தல் போன்றவற்றினை செய்து பலன்களை பெறலாம்.

வையம் நீடுக மாமழை மன்னுக
மெய் விரும்பிய அன்பர் விளங்குக
சைவ நன்னெறி தான்தழைத் தோங்குக
தெய்வ வெண்திரு நீறு சிறக்கவே – பெரியபுராணம்

சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடி தாமரையோனே – திருமந்திரம்

இப்படிபட்ட இறைவனை முழுமுதலாகக் கொண்ட சைவம் அதன் வழி வந்த தமிழ் இரண்டையும் இரு கண்களாகப் போற்றி , அதன்வழி நின்று பிறவிப்பெருங்கடலை நீந்திக் கடப்போம்.

மேனமைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

திருவம்பலம் தென்னவன்
தென்னாடு – செந்தமிழாக சிவமடம்,
கொக்குவில் கிழக்கு கொக்குவில்.