எங்கள் நாயன்மார்களின் திருமுறைகள் பிறவிப்பிணியினை அறுபவையாக மட்டுமல்லாமல் ,வாழ்வின் இருளை நீக்கி அருளைத் தரவல்ல அற்புதத்தமிழ் மந்திரங்கள். அவை வாழ்வியல் பலன்களை அடையவும் வழிகாட்டியாக இருக்கின்றன. அந்தவரிசையில் கருத்தரித்தவர்கள் , அந்தக்கரு கலையாமல் சிறந்தமுறையில் வளரப் பாடவேண்டிய பதிகம் ( கோவில் – திருக்கருகாவூர் , பாடியவர் – திருஞானசம்பந்தர் , திருமுறை – மூன்றாம் திருமுறை , பண் – கௌசிகம்)

திருச்சிற்றம்பலம்

முத்திலங்கு முறுவல் உமை அஞ்சவே
மத்த யானை மறுகவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம்
அத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே

விமுத வல்லசடை யான்வினை யுள்குவார்க்
கமுத நீழலக லாததோர் செல்வமாம்
கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர்
அமுதர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே

பழக வல்லசிறுத் தொண்டர்பா வின்னிசைக்
குழக ரென்றுகுழை யாவழை யாவரும்
கழல்கொள் பாடலுடை யார்கரு காவூரெம்
அழகர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே

பொடிமெய் பூசிமலர் கொய்து புணர்ந்துடன்
செடிய ரல்லாவுள்ளம் நல்கிய செல்வத்தர்
கடிகொள் முல்லைகம ழுங்கரு காவூரெம்
அடிகள் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே

மைய லின்றிமலர் கொய்துவ ணங்கிடச்
செய்ய வுள்ளம்மிக நல்கிய செல்வத்தர்
கைதன் முல்லைகம ழுங்கரு காவூரெம்
ஐயர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே

மாசில் தொண்டர்மலர் கொண்டுவ ணங்கிட
ஆசை யாரவரு ணல்கிய செல்வத்தர்
காய்சி னத்தவிடை யார்கரு காவூரெம்
ஈசர் வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே

வெந்த நீறுமெய் பூசிய வேதியன்
சிந்தை நின்றருள் நல்கிய செல்வத்தன்
கந்த மௌவல்கம ழுங்கரு காவூரெம்
எந்தை வண்ணம்மெரி யும்மெரி வண்ணமே

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று

பண்ணி னேர்மொழி யாளையோர் பாகனார்
மண்ணு கோலம்முடை யம்மல ரானொடும்
கண்ண னேடவரி யார்கரு காவூரெம்
அண்ணல் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே

போர்த்த மெய்யினர் போதுழல் வார்கள்சொல்
தீர்த்த மென்றுதெளி வீர்தெளி யேன்மின்
கார்த்தண் முல்லைகம ழுங்கரு காவூரெம்
ஆத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே

கலவ மஞ்ஞை உலவுங் கருகாவூர்
நிலவு பாடலுடையான் தன நீள்கழல்
குலவு ஞானசம்பந்தன செந்தமிழ்
சொலவலார் அவர் தொல்வினை தீருமே

திருச்சிற்றம்பலம்