திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கப் பாடவேண்டிய திருவேதிகுடிப் பதிகம் – நீறுவரி ஆடுஅரவொடு ஆமை மனவு

 
 

நீண்ட நாளாக திருமணமாகாமல் , திருமணத்தடைகள், இடையூறுகள், இழுபறிகள் நிலவிவந்தால் தஞ்சாவூர் வேதிகுடியில் இருக்கும் மங்கையற்கரசி அம்பாளுடனுறை வேதிகுடி வேதபுரீசுவரப் பெருமானை மனதிலே நினைந்து உளமுருகி திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அருளிச்செய்த முன்றாம் திருமுறை (பதிகம் 3-78 , திருவேதிகுடி) "நீறுவரி ஆடுஅரவொடு ஆமை மனவு" என்ற பதிகத்தினை, காலை மாலை இருவேளையும் வேதிகுடி அரசின் திருவடியை நீள நினைந்து , உளமுருகி மெய்யன்போடு பாடுவது திருமணத்தடைகளை தகர்க்கும்.உரியவர் பாடினால் இன்னும் சிறப்பாகும் இப்படி இயலாதவர்களுக்கு அவர்கள் பொருட்டு பெற்றோரோ , உறவினர்களோ பாடுதலும் பலன்தரும்.

திருவேதிகுடி மாதேவர் – வேதபுரீசுவரர்

திருச்சிற்றம்பலம்

இறைவன்: வேதபுரீசுவரர்    இறைவி: மங்கையர்க்கரசி   பண் : சாதாரி   இராகம்: பந்துவராளி

நீறுவரி ஆடுஅரவொடு ஆமை மனவு என்புநிரை பூண்பர் இடபம்
ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடமாம்
தாறுவிரி பூகம்மலி வாழை விரை நாற இணை வாளை மடுவில்
வேறுபிரியாது விளையாட வளம் ஆரும் வயல் வேதிகுடியே – 1

சொற்பிரிவு இலாதமறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆணை உரிவை
மற்புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழத்
துற்புஅரிய நஞ்சு அமுதமாக முன்அயின்றவர் இயன்ற தொகுசீர்
வெற்புஅரையன் மங்கைஒரு பங்கர்நகர் என்பர்திரு வேதிகுடியே – 2

போழும்மதி பூண்அரவு கொன்றை மலர் துன்றுசடை வென்றி புகமேல்
வாழும்நதி தாழும் அருளாளர் இருள் ஆர்மிடறர் மாதர் இமையோர்
சூழும்இரவாளர் திருமார்பில் விரிநூலர் வரிதோலர் உடைமேல்
வேழஉரி போர்வையினர் மேவுபதி என்பர்திரு வேதிகுடியே   – 3

காடர்கரி காலர்கனல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர் செவியில்
தோடர் தெரி கீளர்சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர்தான்
பாடல் உடையார்கள் அடியார்கள் மலரோடு புனல் கொண்டு பணிவார்
வேடம் ஒளி ஆனபொடி பூசிஇசை மேவுதிரு வேதிகுடியே   – 4

சொக்கர் துணை மிக்க எயில் உக்க அற முனிந்து தொழு மூவர் மகிழத்
தக்க அருள் பக்கம் உற வைத்த அரனார் இனிது தங்கும் நகர்தான்
கொக்கு அரவம் உற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலாம்
மிக்க அமரர் மெச்சி இனிது அச்சம் இடர் போக நல்கு வேதிகுடியே   – 5

செய்யதிரு மேனிமிசை வெண்பொடி அணிந்து கருமான் உரிவை போர்த்து
ஐயம் இடும் என்று மடமங்கை யொடு அகம் திரியும் அண்ணல் இடமாம்
வையம் விலை மாறிடினும் ஏறுபுகழ் மிக்கி இழிவு இலாதவகையார்
வெய்ய மொழி தண்புலவருக்கு உரை செயாத அவர் வேதிகுடியே   – 6

உன்னி இரு போதும் அடி பேணும் அடியார் தம் இடர் ஒல்கு அருளித்
துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணைவன் தன் இடமாம்
கன்னிய ரொடு ஆடவர்கள் மாமணம் விரும்பி அரு மங்கலம் இக
மின்இயலும் நுண்இடை நல் மங்கையர் இயற்றுபதி வேதிகுடியே – 7

உரக்கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடிதோள்
அரக்கனை அடர்த்தவன் இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன் இடம்
முருக்கு இதழ் மடக்கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை
விரைக்குழல் மிகக் கமழ விண்ணி இசை உலாவுதிரு வேதிகுடியே   – 8

பூவின்மிசை அந்தணனொடு ஆழிபொலி அங்கையனும் நேட எரியாய்த்
தேவுமிவர் அல்லர் இனி யாவர்என நின்று திகழ்கின்றவர் இடம்
பாவலர்கள் ஓசை இயல் கேள்விஅது ஆறாத கொடையாளர் பயில்வாம்
மேவு அரிய செல்வம்நெடு மாடம்வளர் வீதி நிகழ் வேதிகுடியே   – 9

வஞ்சஅமணர் தேரர் மதிகேடர் தம்மனத்து அறிவிலாதவர் மொழி
தஞ்சம்என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடமாம்
அஞ்சுபுலன் வென்று அறுவகைப் பொருள் தெரிந்து எழுஇசைக் கிளவியால்
வெஞ்சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திருவேதிகுடியே   – 10

திருக்கடைக் காப்பு

கந்தம்மலி தண்பொழில் நல்மாடம் இடை காழி வளர் ஞானம் உணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி ஆதி கழலே
சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி இயிமையோர்
அந்தஉலகு எய்தி அரசாளும் அதுவே சரதம் ஆணை நமதே   – 11

நறுமணம் கமழும் குளிர்ந்த சோலைகளும், அழகிய மாடங்களும் நெருங்கிய சீர்காழியில் அவதரித்த திருஞான சம்பந்தர் அவர்கள் பொருட்செறிவுடைய செந்தமிழில் அருளிய இப்பாமாலையைக் கொண்டு திருவேதிகுடியில் வீற்றிருந்தருளும் முதல்வனான சிவபெருமானின் (வேதபுரீசுவரர் , வாளைமடுநாதர்) திருவடிகளைச் சிந்தித்துப் போற்றுபவர்கள் நல்லவர்களாய்த் திகழ்வர். மறுமையில் அருள் உலகை அடைந்து அரசாள்வர். இது நமது ஆணை – திருஞானசம்பந்தர்

திருச்சிற்றம்பலம்

பதிகத்தில் ஒருபாட்டும் பொருளும்

உன்னி இரு போதும் அடி பேணும் அடியார் தம் இடர் ஒல்கு அருளித்
துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணைவன் தன் இடமாம்
கன்னிய ரொடு ஆடவர்கள் மாமணம் விரும்பி அரு மங்கலம் இக
மின்இயலும் நுண்இடை நல் மங்கையர் இயற்றுபதி வேதிகுடியே

காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் நினைந்து தன் திருவடிகளைப் போற்றும் அடியார்களுடைய துன்பங்கள் நீங்கும்படி அருள் செய்பவனாகிய , சிவபெருமான் தன்னை அடைந்த சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர் களுக்கும் கல்லால மரத்தின்கீழ் தென்முகக்கடவுளாக கோலம் கொண்டு அறம் உரைத்தவன்.

அனைத்து உயிர்களுக்கும் பற்றுக்கோடாய் விளங்குபவன். அவன் உறைவிடம் கன்னியர்களும், ஆடவர்களும் சிறப்பான வகையில் திருமணம் செய்து கொள்ளும் மங்கலநாளில் , திருமணத்திற்குரிய மங்கலச் சடங்குகளை மிகச் சிறப்புற நடத்துகின்ற மின்னலைப் போன்ற நுண்ணிடையுடைய மகளிர்கள் வாழும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும்.

திருமண வரலாறு:

சோழமன்னர்களில் ஒருவன் தன் மகளின் திருமணம் தொடர்ந்து தடைபட்டு வந்ததால் மிகவும் வருந்தினார். ஒரு முறை அவன் இக்கோயில் வந்து வேதபுரீசுவரரையும் , மங்கையர்க்கரசி அம்மனைத் மெய்யன்புடன் வழிபட்டு , தன் மகளின் திருமணம் விரைவில் நடக்க வரம் வேண்டினான். இறைவன் கருணையால் அவனது மகளுக்கு விரைவில் திருமணம் நடந்தது என்பது வரலாறு.

திருவேதிகுடி செல்லுங்கள் :

திருமணத் தடைகள் நீங்கி இனிதே திருமணம் நடைபெற்றவர்கள் இயலுமாயின் திருவேதிகுடி சென்று வேதபுரீசுவரர் மற்றும் மங்கையர்க்கரசி அம்மனை வழிபட்டு வாழ்வாங்கு வாழ எல்லாம்வல்ல திருவருள் கைகூடட்டும்.

தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் சாலையில் கண்டியூர் வந்து பின்னர், அங்கிருந்து அய்யம்பேட்டை நெடார் செல்லும் சாலையில் 1 கீ மீ சென்றால் இந்தக் கோவிலை அடையலாம்.



எடுத்த காரியம் வெற்றிபெற, செய்வினைகள் அகல...

மேலும் வாசிக்க...
விதியை வெல்லும் வழிமுறைகள் - விதிமாற்றும் விரிசடையான்

மேலும் வாசிக்க...
இருதயநோய் விலக அதன் வலிமை குறையை பாடவேண்டிய பதிகங்கள்

மேலும் வாசிக்க...