சடங்குகள் செய்ய இயலாத காலத்தில் சிவப்பேறு அடைந்தவர்களுக்குரிய தென்புலத்தார் வழிபாடு

 
 


சிவமயம்

கோவிட் தீநுண்மிப் பரவல் மற்றும் பயணத்தடை காலத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய இயலாதவர்கள் வீட்டில் இருந்தே வழிபட்டு, இறந்தவர்களின் உயிருக்கு ஈடேற்றம் கொடுக்கும் செந்தமிழ் ஆகம திருமுறை வழிகளை தென்னாடு சிவமடம் வெளியிட்டிருக்கிறது. அத்துடன் அவர்களின் அடுத்த திதிநாள் வரைக்கும் ஓதவேண்டிய மற்றும் வழிபாடு ஆற்ற வேண்டிய முறைமைகளையும் இங்கே உள்ளடக்கி இருக்கிறோம்.

உங்கள் பெற்றோர், உறவினர்களின் உயிர் உடலைவிட்டுத் தான் பிரிந்துள்ளது. அந்த உயிருக்கு என்றும் அழிவில்லை. அவர்களின் உயிரின் முத்திப்பேற்றுக்கும் மற்றும் அவ்வுலகில் அதாவது சிவபுரத்தில் அருள்வேண்டியும் பிள்ளைகள் மற்றும் உறவினர்களாகிய நீங்கள் செய்ய வீட்டில் இருந்தே செய்யவேண்டிய படிமுறைகளை நாங்கள் இங்கே தருகிறோம். அத்துடன் அவர்களின் உயிரின் நிலைபேற்றிக்கு தென்னாடு சிவமடத்தினராகிய நாங்களும் எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டி விண்ணப்பம் வைக்கிறோம்.

சிவபேறு அடைந்தவரின் படத்தை வைத்து அவர்களுக்காக ஒரு செம்பில் தண்ணீரும்  தட்டில் கற்பூரமும் ஏற்றி கீழ்வரும் பாடலை ஓதுக.

அங்கத்தை மண்ணுக் காக்கி யார்வத்தை யுனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச்
சங்கொத்த மேனிச் செல்வா சாதனா ணாயே னுன்னை
எங்குற்றா யென்ற போதா விங்குற்றே னென்கண் டாயே

அதன் பின்னர் வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றுகூடி திருவாசகத்தில் சிவபுராணம் ஓதி சிவப்பேறு அடைந்த உயிரினை நினைத்து மலரிட்டு வழிபாடு ஆற்றுக.

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன், அநேகன், இறைவன் அடிவாழ்க  (#TV01)

பின்னர் திருவிளக்கு ஏற்றி சிவப்பேறு அடைந்த உயிரின் பொருட்டு திருவாசகத்தில் உத்தரகோசமங்கையில் அருளிய நீத்தல் விண்ணப்பப் பதிகத்தினை ஓதுக.

கடையவனேனைக் கருணையி னால்கலந்து ஆண்டுகொண்ட
விடையவனே,விட்டிடுதி கண்டாய் விறல் வேங்கையின்தோல்
உடையவனே,மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே!
சடையவனே, தளர்ந்தேன்; எம்பிரான் என்னைத் தாங்கிக்கொள்ளே  (#TV06)

அத்துடன் சிவப்பேறு அடைந்த உயிரின் பொருட்டு திருவாசகத்தில் தில்லையில் (சிதம்பரத்தில்) அருளிய யாத்திரைப் பத்து பதிகத்தினையும் முழுமையாக ஒதுக.

பூஆர் சென்னி மன்னன்,எம்
புயங்கப் பெருமான், சிறியோமை
ஓவாது உள்ளம் கலந்து உணர்வாய்
உருக்கும், வெள்ளக் கருணையினால்,
‘ஆ! ஆ!’ என்னப் பட்டு, அன்பாய்
ஆட்பட்டீர்! வந்து ஒருப்படுமின்;
போவோம்; காலம் வந்தது காண்;
பொய்விட்டு, உடையான் கழல் புகவே. (#TV45)

அதன்பின்னர் சிவப்பேறு அடைந்த உங்கள் பெற்றோர் அல்லது உறவினரின் உயிர் மறுபிறவி ஒன்றில் மீண்டும் மாளாமல்  சிவப்பரம் பொருளின் பாதங்களில் நிலைபெற வேண்டி திருவாசகத்தில் திருப்பெருந்துறையில் அருளிய வாழாப் பத்தினை ஓதுக

பாரொடு, விண்ணாய்ப் பரந்த எம் பரனே!
பற்றுநான் மற்றுஇலேன் கண்டாய்;
சீரொடு பொலிவாய், சிவபுரத்து அரசே!
திருப்பெருந்துறை உறை சிவனே!
ஆரொடு நோகேன்? ஆர்க்கு எடுத்து உரைக்கேன்?
ஆண்ட நீ, அருளிலை ஆனால்,
வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்;
‘வருக' என்று அருள் புரியாயே.   (#TV28)

பின்னர் சிவப்பேறு அடைந்த உங்கள் பெற்றோர் அல்லது உறவினரின் உயிரை சிவன் தன்னுள் ஈர்த்துக் கொண்டு அடைக்கலம் கொடுக்க / தர வேண்டும் என்று எண்ணி திருவாசகத்தில் திருப்பெருந்துறையில் அருளிய உயிர் உண்ணிப்பத்து, அடைக்கலப் பத்து பதிகங்களை ஓதுக

பைந்நாப்பட அரவுஏர் அல்குல் உமைபாகம் அதுஆய்,என்
மெய்ந்நாள்தொறும் பிரியா,வினைக்கேடா! விடைப்பாகா!
செந்நாவலர் பரசும் புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்!
எந்நாள் களித்து, எந்நாள் இறுமாக்கேன், இனி, யானே?   உண்ணிப்பத்து (#TV34)

செழுக் கமலத்திரள் அன நின்
சேவடி சேர்ந்து அமைந்த,
பழுத்த மனத்து அடியர் உடன்
போயினர்; யான், பாவியேன்
புழுக்கண் உடைப் புன்குரம்பைப்
பொல்லாக், கல்வி ஞானம் இலா
அழுக்கு மனத்து அடியேன்;
உடையாய்! உன் அடைக்கலமே!   அடைக்கலப் பத்து (#TV24)

அவ்வாறு ஈர்க்கப் பட்ட உயிரானது இறைவனையே சிக்கெனப் பிடிக்க வேண்டும் என்று எண்ணி திருவாசகத்தில் திருத்தோணிபுரத்தில் அருளிய பிடித்தபத்து ஓதுக

உம்பர்கட்கு அரசே! ஒழிவுஅற நிறைந்த
யோகமே! ஊற்றையேன் தனக்கு
வம்புஎனப் பழுத்து, என் குடிமுழுது ஆண்டு
வாழ்வுஅற வாழ்வித்த மருந்தே!
செம்பொருள் துணிவே! சீர்உடைக் கழலே!
செல்வமே! சிவபெருமானே!
எம்பொருட்டு, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;
எங்குஎழுந்து அருளுவது, இனியே?    (#TV37)

அவ்வாறு சிக்கெனபிடித்த உயிரானது இறைவனையே அடைக்கலம் என்று எண்ண வேண்டும் என வேண்டி திருவாசகத்தில் திருப்பெருந்துறையில் அருளிய பிரார்த்தனைப் பத்து ஓதுக

கலந்து, நின்னடியாரோடு அன்று
வாளா களித்து இருந்தேன்;
புலர்ந்து போன காலங்கள்; புகுந்து
நின்றது இடர், பின்நாள்;
உலர்ந்து போனேன்; உடையானே! உலவா
இன்பச் சுடர் காண்பான்;
அலந்து போனேன்; அருள்செய்யாய், ஆர்வம்
கூர அடியேற்கே.   (#TV32)

இவ்வாறு பேரின்பப்பேறு பெற்ற உயிர் தான் பெற்ற பேற்றினை எண்ணி மகிழ்வதாக நினைத்து திருவாசகத்தில் திருத்தில்லையில் அருளிய ஆனந்த மாலை மற்றும் அச்சோப் பதிகங்களை ஒதுக

மின்நேர் அனைய பூங்கழல்கள்
அடைந்தார் கடந்தார், வியன் உலகம்;
பொன்நேர் அனைய மலர்கொண்டு
போற்றா நின்றார், அமரர் எல்லாம்;
கன்நேர் அனைய மனக்கடையாய்,
கழிப்புண்டு, அவலக் கடல் வீழ்ந்த
என்நேர் அனையேன் இனி, உன்னைக்
கூடும் வண்ணம், இயம்பாயே.    -  ஆனந்த மாலை    (#TV50)

முத்திநெறி அறியாத
மூர்க்கரொடு முயல்வேனை,
பத்திநெறி அறிவித்துப்,
பழவினைகள் பாறும்வண்ணம்,
சித்தமலம் அறுவித்து,
சிவம்ஆக்கி,எனை ஆண்ட,
அத்தன்,எனக்கு அருளிய ஆறு,
ஆர்பெறுவார்? அச்சோவே!     -   அச்சோப் பதிகம்  (#TV51)  எனத் திருவாசகத்தினைப் பாடி தீபம் காட்டுக.

வீடுபேறு (மோட்சம்) தீபம் ஏற்றல்

ஒரு பெரிய தீபத்தை ஏற்றி அதில் சிவபெருமானை எழுந்தருளப் பண்ணுக

சிவபெருமான் என்று நான் அழைத்து ஏத்த
தவ பெருமான் என்று தான் வந்து நின்றான்
அவ பெருமான் என்னை ஆள் உடை நாதன்
பவ பெருமானை பணிந்து நின்றேனே  - திருமந்திரம்

சிறிய தீபத்தில் உங்கள் சிவப்பேறு அடைந்த பெற்றோர் அல்லது உறவினரின் உயிரினை அழைத்து எழுந்தருளவைத்து (அம்மாவே எழுந்தருளுக)  திருவாசகத்தில் திருப்பெருந்துறையில் அருளிய அதிசயப் பத்து பதிக்கத்தினை ஓதி ஓவ்வொரு பாட்டு முடிவிலும் அச்சிறிய தீபத்தை அசைத்து பெரிய தீபத்தின் (சிவனிடம்) அருகில் கொண்டு சென்று சேர்க்க.

வைப்பு, மாடு என்றும்; மாணிக்கத்து ஒளி என்றும்;
மனத்திடை உருகாதே,
செப்பு நேர்முலை மட வரலியர் தங்கள்
திறத்திடை நைவேனை
ஒப்பு இலாதன, உவமனில் இறந்தன,
ஒண்மலர்த் திருப்பாதத்து
அப்பன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டோமே!    (#TV51)

இறுதியில் சிறிய தீபத்தில் உள்ள திரியை பெரிய தீபத்தில் உள்ள திரியுடன் சேர்த்து (உயிர் சிவனிடம் முற்றாக ஐக்கியம் அடைதல்) திருமந்திரத்தில் பின்வரும் பாடலை ஒதுக

அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் சிவதத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியா ருடன் கூடல் பேரின்ப மாமே - திருமந்திரம்

உங்கள் சிவப்பேறு அடைந்த பெற்றோர் அல்லது உறவினரின் உயிர் எல்லாம்வல்ல சிவபரம்பொருளின் சிவபுரத்தினை அடைந்து, அவருடன் இணைந்து மீண்டும் பிறப்பில்லாப் பேரின்பப்  பெருவாழ்வினை அடைய வேண்டுமென்று சிவபெருமானிடம் வேண்டி நீத்த அதே திதி மீண்டும் வரும் வரையாவது தொடர்ந்து ஒவ்வொரு நாளும்  திருவாசகத்தில் சிவபுராணத்தினை ஓதி எல்லாம்வல்ல சிவபுரத்து அரசிடம் விண்ணப்பம் வைத்து வழிபாடு ஆற்றுக.


உதாரணமாக வளர்பிறை ஒருமைப் பிறைநாளில் அதாவது திதியில் (ஏகாதசியில்) உயிர் நீத்தால் அடுத்த திங்கள் (மாதம்) வளர்பிறை ஒருமைப் பிறைநாள் வரும் வரையாவது தினமும் சிவபுராணம் ஒதுக. பின்னர் ஓராண்டிற்கு ஒவ்வொரு திங்களும் (மாதமும்) வருகின்ற அதே திதியில் சிவபுராணம் ஓதி வழிபடுக. அவர்களின் படத்திற்கு திருவிளக்கு ஏற்றி, உணவு படைத்தது வழிபாடு செய்க. இயலுமாயின் சிவனடியார்களுக்கு அத்திதியில் உணவு மற்றும் ஆடை தானமாகக் கொடுக்கலாம்.

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே – திருமந்திரம்

சிவத்திரு.வள்ளிகாந்தன் நிகரிலரசு
தென்னாடு சிவமடம் - யாழ்ப்பாணம்



சோழர்கால வாரிவனேசர் மீண்டும் சாவகச்சேரியில்

மேலும் வாசிக்க...