மதுரையில் மனம் தடுமாறிக் கூன்பாண்டியன் சமணசமயத்திற்கு மாறினான்.அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி என்பதற்கு இணங்க மக்களும் சமணமாக மாறத்தொடங்கினர். இதனால் மனங்கலங்கிய அரசியர் மங்கையர்கரசியாரும் , அமைச்சர் குலச்சிறையாரும் அற்புதத்திறத்தினால் மன்னனை சைவத்திற்கு மீட்பார் என்ற நம்பிக்கையில் திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைத்தனர்.

இதனை அறிந்த சமணர்கள் திருஞானசம்பந்தப்பெருமான் தங்கியிருந்த மடத்திற்கு மந்திரத்தால் தீ மூட்ட முயற்சித்து பயனளிக்காததால் தந்திரத்தால் இரவோடு இரவாக மடத்தைக் கொளுத்தினர். சம்பந்தப்பெருமானும் சற்றே பயம்கொள்ளாமல்

செய்யனே திருவாலவாய் மேவிய
ஐயனே அஞ்சலென்று அருள் செய்யெனைப்
பொய்யராம் அமணர் கொளுவுஞ் சுடர்
பையவே சென்று பாண்டியற் காகவே

பொய்யராகிய சமணர் இம்மடத்திற்கு வைத்த இந்நெருப்பு மெல்லச் சென்று பாண்டிய மன்னனைப் பற்றுவதாக என்று பாட அது சென்று பாண்டிய மன்னனிற்கு வெப்பு நோயாக மாறியது.

ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னனுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

ஆற்றலும் பிறரைக் கொல்லும் வலிமையும் கொண்ட விடையின்மீது ஏறிவரும் ஆலவாய் அண்ணலின் திருநீற்றைப் போற்றிப் புகலியில் விளங்கும் பூசுரனாகிய ஞானசம்பந்தன் சைவத்தின் பெருமையைத் தெளிவித்துப் பாண்டிய மன்னனின் உடலில் பற்றிய தீமை விளைத்த பிணி தீர பாடிய இப்பதிகப் பாடல்களை போடுகிறவர்கள் பிணிகள் நீங்கி நல்லவராக வாழ்வாங்கு வாழ்வர்.

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருவால வாயான் திருநீறே

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ வினியது நீறு
சித்தி தருவது நீறு திருவால வாயான் திருநீறே

காண வினியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருவால வாயான் திருநீறே

பூச வினியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச வினியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவால வாயான் திருநீறே

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வான மளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவால வாயான் திருநீறே

எயிலது வட்டது நீறு விருமைக்கு முள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் திருவால வாயான் திருநீறே

இராவணன் மேலது நீறு வெண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி யால வாயான் றிருநீறே

மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கண் மெய்யது வெண்பொடி நீறு
ஏல வுடம்பிடர் தீர்க்கு மின்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் றிருநீறே

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத வினியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்து மால வாயான் றிருநீறே